மானாமதுரை அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி - குளிக்க சென்ற போது பரிதாபம்
குளிக்க சென்ற போது கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வைரவன். அவருடைய மகன் வெற்றிபாண்டியன் (வயது 14). 8-ம் வகுப்பு மாணவன். பெருமாள் கோவிலை சேர்ந்த நாராயணன் மகன் புவனேஸ் (17). இவர்கள் இருவரையும் ேநற்று முன்தினம் மாைலயில் இருந்து காணவில்லை.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை பற்றி எந்த தகவலும் தெரியாததால் சிறுவர்களின் பெற்றோர் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகிேயார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே திருப்பாச்சேத்தி கண்மாயில் தண்ணீர் நிறைந்து உள்ளதால் ஒருவேளை சிறுவர்கள் அங்கு குளிக்க சென்று இருக்கலாம் என கருதிய போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு விசாரித்தனர். அங்கு கண்மாய் கரையோரத்தில் சிறுவர்களின் ஆடைகள் கிடந்தன.
இதனால் கண்மாயில் குளிக்க இறங்கிய சிறுவர்கள் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதி, உடனே தீயணைப்பு வீரர்களை வரவழைத்து தேடினார்கள். தீயணைப்பு வீரர்களும் கண்மாயில் இறங்கி தேடினார்கள். இரவு 8.30 மணி வரை தேடினார்கள். அப்போது மழை பெய்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
பின்னர் நேற்று காலை முதல் மானாமதுரை தீயணைப்பு துறை அலுவலர் குமரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடும் பணியில் இறங்கினர். அப்போது வெற்றிபாண்டியன் பிணமாக மீட்கப்பட்டான். பின்னர் சிறிது நேரத்தில் புவனேஸ் உடலையும் மீட்டனர்.
அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்த மானாமதுரை தொகுதி நாகராஜன் எம்.எல்.ஏ., சிறுவர்களை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். குளிக்க சென்ற இடத்தில் கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story