அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2021 8:41 PM IST (Updated: 8 Jan 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் பேரவை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

அதன்படி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று காலை 10 மணியளவில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதையொட்டி அவர்கள் பணிமனை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்திருந்தனர்.

போராட்டத்துக்கு எல்.பி.எப். தொழிற்சங்க தேனி கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மத்திய சங்க துணைத் தலைவர் சதீஷ்குமார், ஐ.என்.டி.யு.சி. மத்திய சங்க பொருளாளர் ஜெகநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இதில் சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஏ.எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story