கடலாய் மாறிய மலைகளின் இளவரசி: சாரை, சாரையாக தரை இறங்கிய மேக கூட்டங்கள் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கடலை நினைவுப்படுத்தும் வகையில் சாரை, சாரையாக வெண்ணிற மேக கூட்டங்கள் கொடைக்கானலில் தரையிறங்கின. இந்த காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல்,
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலம் என்றாலே, நம் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் எல்லையில்லா காட்சிக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், கிள்ளி கொடுக்காமல் இயற்கை அன்னை அள்ளி கொடுத்திருப்பது அனைவரும் அறிந்ததே.
சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 30-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை மழை பெய்தது.
தொடர்மழை எதிரொலியாக, கொடைக்கானல் நகர் பகுதியில் குளிர் குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் வெப்பமான வானிலை நிலவியது. மாலை 3 மணிக்கு பிறகு மேக கூட்டங்கள் தரை இறங்கிய கண்கொள்ளா காட்சி அரங்கேறியது.
விண்ணில் இருந்து சாரை, சாரையாக இறங்கிய மேக கூட்டங்கள் மலைப்பகுதியில் மகுடம் சூட்டின. பள்ளத்தாக்கில் தவழ்ந்து சென்ற மேக கூட்டங்கள் அலை, அலையாக அணிவகுத்து கடலை நினைவுப்படுத்துவதை போல காட்சி அளித்தது.
வெண்ணிற நுரை பொங்கி வர, ஓசை இல்லாத கடல் அலையைப்போல பள்ளத்தாக்கில் மேக கூட்டங்கள் பரந்து விரிந்து கிடந்தன. முகடுகளை முத்தமிட்டது மட்டுமின்றி, அவற்றை மேக கூட்டங்கள் முற்றுகையிட்டன.
இமைகளை மூடுவதே சுமை என்று கருதும் அளவுக்கு காண்போரின் கண்களுக்கு மேக கூட்டங்கள் சிறந்த விருந்தாக அமைந்தது. குறிப்பாக கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் தரை இறங்கிய மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
மலைகளை மட்டுமின்றி மக்களையும் ஆக்கிரமித்து இருந்த மேக கூட்டங்களை சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். முகடுகளை மூடிய மேக கூட்டங்கள், வாகன ஓட்டிகளையும் தள்ளாட செய்து விட்டது.
வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் மறியல் செய்ததை போல, மேக கூட்டங்கள் வேலி அடைத்து விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பகலிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.
கடும் குளிர், தொடர் மழையினால் சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் தவித்த சுற்றுலா பயணிகளுக்கு நேற்று நிலவிய இதமான வானிலை இதயத்தை வருட செய்தது என்றால் அது மிகையல்ல.
ஒருவரை மற்றொருவர் தேடி பிடிக்கும் வகையில், தரையில் திரண்டிருந்த மேக கூட்டங்களுக்கு இடையே மறைந்தபடி பைன் மரக்காடு உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் ஆகும். ஆனால் பருவநிலை மாறி வருகிறது. இதனால் கொடைக்கானல் நகரவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story