மெரினாவை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கியமானது; ஐகோர்ட்டு கருத்து


மெரினாவை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கியமானது; ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 9 Jan 2021 5:19 AM IST (Updated: 9 Jan 2021 5:19 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

நிவாரண உதவி
சென்னை ஐகோர்ட்டில், மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். முராரி கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த லூப் சாலையை புனரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

முக்கியத்துவம் இல்லை
இந்த நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எல்.பி.மௌரியா, மீன்பிடித் தடைகாலத்தில் வழங்கப்படும் மானியத் தொகையை உயர்த்த கோரி இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு தொடரப்பட்டது.

ஆனால் வழக்கின் பிரதான கோரிக்கையை விடுத்து மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரதான கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை என வாதிட்டார்.

மீனவர்கள் நலன்
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனும், அவர்களுக்கான மனித உரிமைகளும் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. அழகுபடுத்துவது தேவை தான் என்றாலும், மீனவர் நலன் சார்ந்த விவகாரங்களே முதன்மையானது.

மேலும் மெரினாவில் 900 தள்ளுவண்டிகளில் குறிப்பிட்ட சதவிகித கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும’’ என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பொங்கல் விடுமுறைக்குப்பின் தள்ளிவைத்தனர்.

Next Story