பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19 ஆயிரம் சிறப்பு பஸ்கள்; சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19 ஆயிரம் சிறப்பு பஸ்கள்; சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 9 Jan 2021 12:06 AM GMT (Updated: 9 Jan 2021 12:06 AM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்காக 19 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களின்போது, பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆலோசனை
இதையொட்டி போக்குவரத்துத்துறை சார்பில் இந்த ஆண்டு எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்குவது?, பயணிகளுக்கு செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, போக்குவரத்து கமிஷனர் டி.எஸ்.ஜவகர் மற்றும் மேலாண் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு...

இந்த கூட்டம் முடிந்தவுடன், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 50 பஸ்களுடன், 4 ஆயிரத்து 78 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 10 ஆயிரத்து 228 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து 5 ஆயிரத்து 993 சிறப்பு பஸ்கள் என தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 221 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 10 ஆயிரத்து 71 சிறப்பு பஸ்கள் ஆகும்.

பொங்கல் பண்டிகைக்கு பின்பு...
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்காக 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 50 பஸ்களுடன், 3 ஆயிரத்து 393 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5 ஆயிரத்து 727 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 270 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதில் 9,120 சிறப்பு பஸ்கள் ஆகும்.

13 முன்பதிவு மையங்கள்
பஸ்களுக்கு முன்பதிவுசெய்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியம் (மெப்ஸ்) பஸ்நிலையத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு மையமும் என 13 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நடைமுறையில் உள்ள www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com www.busindia.com போன்ற இணையதளம் மூலமாகவும் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்துள்ள பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ள பயணிகளை ஏற்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் புகார்
பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 

மேலும், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகள் பஸ் மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, நோய் தொற்று காலத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முககவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 22,588 பஸ்கள் இயக்கப்பட்டன. 8 லட்சத்து 47 ஆயிரத்து 837 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 இடங்கள்
சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.

அதன் விவரம் வருமாறு:-

* மாதவரம் புதிய பஸ் நிலையம்- செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள்.

* கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம்- ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள்.

* தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்) -திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள்.

* தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம்- திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் 

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள்.

*பூந்தமல்லி பஸ் நிலையம்- வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பஸ்கள்.

* கோயம்பேடு பஸ் நிலையம்- மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், 

கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு 10 ஆயிரத்து 71 சிறப்பு பஸ்களும், பொங்கல் பண்டிகைக்கு பின்பு 9 ஆயிரத்து 120 சிறப்பு பஸ்களும் என 19,191 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story