இன்னும் 2 மாதமாவது கவனமாக இருக்க வேண்டும்; கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை; சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி


ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தபோது
x
ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தபோது
தினத்தந்தி 9 Jan 2021 6:24 AM IST (Updated: 9 Jan 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை. இன்னும் 2 மாதமாவது நாம் கவனமாக இருக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை கண்காணிக்க ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர், கண்காணிப்பு மையத்தில் செய்யப்படும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதமாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பிரகாஷ் கூறியதாவது:-

பேட்டரி வாகனம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அரசு ஒத்துழைப்புடன் தனியார் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்க 100 முதல் 150 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் தரப்பட்டு உள்ளது. இதனால் வேலைப்பளு குறைந்து உள்ளதால குப்பைகள் அகற்றும் பணியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த கண்காணிப்பு மையத்தின் மூலம் யார் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். வேறு எந்த மாதிரியான பிரச்சினைகள் உள்ளன என்பதை கண்டறிந்து அடுத்த நாளே சரிசெய்யப்படும். ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு குப்பைகளை சேகரிக்கிறார் என்பது உள்ளிட்ட தகவல்களையும் கண்டறிய முடியும். இது இணைய இணைப்பின் மூலம் மாநகராட்சியிலும் கண்காணிக்கப்படும். பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

முழுவதும் நீங்கவில்லை
மழையால் சேதமடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஆபத்து முழுவதும் நீங்க வில்லை.குறைந்தது இன்னும் 2 மாத காலமாவது நாம் கவனமாக இருக்க 
வேண்டும். எனவே திரையரங்குகளில் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். முககவசம் இல்லாம் யாரையும் உள்ளே அனுமதிக்கூடாது. ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் கிருமி நாசினி கொண்டு திரையரங்கை சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் திவ்யதர்ஷினி, துணை கமிஷனர் ஆல்பி ஜான், மண்டல அலுவலர் சீனிவாசன், என்ஜினீயர்கள் முரளி, ராஜசேகர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

Next Story