திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை - கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த 2-ந் தேதி 5 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒத்திகையை தொடர்ந்து நேற்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதில் தடுப்பூசி போட வருபவரின் உடல் வெப்பம், ரத்த அழுத்தம் பரிசோதனை, கணினியில் ஆன்லைன் பதிவு செய்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை குறித்த ஒத்திகை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போளூர் அரசு மருத்துவமனை, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை, திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையம், ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையம், கட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அத்தியந்தல் ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை என 9 மருத்துவமனைகளில் நடைபெற்றது.
அரசு மூலம் தடுப்பூசி வந்தவுடன் அவை குளிர்சாதன இருப்பு பெட்டியில் வைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு போடப்படவுள்ளது. இதற்கான விவரங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, டாக்டர் ஷகீல்அகமது, இணை இயக்குனர் (நலப் பணிகள்) கண்ணகி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அஜிதா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து கலெக்டர் திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்பு சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்க தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதில் டாக்டர்கள் செந்தில்குமார், அருவி, நகராட்சி சித்தமருத்துவர் சங்கரீஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, சுகாதார மாவட்ட புள்ளியாளர் லட்சுமணன், செவிலியர்கள், களப் பணியாளர்கள், பங்கேற்றனர்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுதா கூறுகையில் சுகாதாரத்துறை சார்பில் முதற்கட்டமாக அரசு சுகாதாரத் துறையில் பணிபுரியும் செவிலியர்கள், களப்பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. தற்போது எப்படி அதனை பயன்படுத்துவது என்பதுகுறித்து ஒத்திகை நடைபெற்றது என்றார்.
Related Tags :
Next Story