திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்


திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2021 5:41 PM IST (Updated: 9 Jan 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மிகவும் மோசமடைந்தது. சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரின் பல்வேறு இடங்கள் விஸ்தரிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அங்கு முறையான சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

இதனால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இதுபோல திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு ஆழ்வார்தோப்பு பகுதியில் சாலை வசதி, குப்பைத்தொட்டி சாக்கடை வசதி உள்ளிட்டவை அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆழ்வார்தோப்பு பகுதி மக்கள் அடிப்படை வசதி செய்து தரக் கோரியும், சுகாதாரமற்ற நிலையில் சேதமடைந்து இருக்கும் பாலத்தை சீர் செய்து தர வலியுறுத்தியும், சிறிய மழை பெய்தால் கூட அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் மழைநீர் வடிவதற்கு உரிய வழிவகை செய்து தர வலியுறுத்தியும், ஆழ்வார் தோப்பு சமூக நல கூட்டமைப்புடன் இணைந்து 200-க்கும் மேற்பட்டவர் திரண்டு நேற்று பிற்பகல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் தரப்பில், அதிக மக்கள் குடியிருக்கக்கூடிய பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் தெரிவித்தனர். அதற்கு, மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துகூறி தீர்வு காண்பதாக போலீசார் எடுத்துக் கூறினார்கள். அதன்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story