திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
திருச்சி,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி எவ்வாறு போடுவது என்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி இம்மாதம் 8-ந் தேதி(நேற்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி எவ்வாறு போடுவது என்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.
இதனை தொடங்கி வைத்து கலெக்டர் சிவராசு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராமலிங்க நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இவற்றில் 5 பேர் கொண்ட குழுவின் மூலம் இது நடத்தப்பட்டது.
இவற்றில் முதல் நபர் கோவிட் செயலியில் பதிவு செய்யப்பட்ட நபரை தடுப்பூசி வழங்கும் அறைக்குள் அனுமதிக்கும் பணியினை மேற்கொண்டார். இரண்டாம் நபர் தடுப்பூசி வழங்கும் குறிப்பிட்ட நபரின் விவரங்களை கணினி மூலம் ஆய்வு செய்தார். மூன்றாம் நபர் மூலம் தடுப்பூசி வழங்கும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. நான்கு மற்றும் ஐந்தாம் நபர் மூலம் 30 நிமிடம்வரை தடுப்பூசிகளின் மூலம் அவருக்கு ஏதேனும் விளைவுகள் ஏற்படுகின்றனவா? என்பதை கண்காணித்தல் மற்றும் அடுத்தடுத்த நபர்களை தடுப்பூசி வழங்க அனுப்புதல் ஆகிய நிகழ்வுகள் முறையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 5 ஆயிரத்து 542 பணியாளர்களின் விவரங்கள் முழுமையாகவும், தனியார் மருத்துவமனைகளில் 7 ஆயிரம் மருத்துவ பணியாளர்களில் 6 ஆயிரத்து 553 பணியாளர்களது விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களின் விவரங்கள் 3,126-ல், 2,728 பணியாளர்களது விவரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 2 நாட்களில் மீதமுள்ள பணியாளர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஒத்திகையின்போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் வனிதா மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story