தி்ண்டிவனம் அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - 2 வாலிபர்களிடம் விசாரணை


தி்ண்டிவனம் அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - 2 வாலிபர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 9 Jan 2021 9:02 PM IST (Updated: 9 Jan 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திண்டிவனம்,

திண்டிவனம் ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீஸ்காரர் சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். திண்டிவனம்-செஞ்சி சாலையில் வேம்பூண்டி கூட்டுப்பாதை சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் சென்றனர். இதை பார்த்ததும் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பிடிப்பதற்காக துரத்திச்சென்றனர்.

அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அந்த சமயத்தில் ஒரு வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜை வெட்டினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் ரோஷணை போலீஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் விசாரித்தார். இருவரும் சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story