மேடவாக்கத்தில் எலெக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
மேடவாக்கத்தில் ஹார்வேர்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
எலெக்ட்ரிக்கல் கடையில் ‘தீ’
சென்னையை அடுத்த மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 46). இவரது சகோதரர் துரை (48). இருவரும் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகின்றனர். இதில், துரை கடையின் மேல் தளத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் வியாபாரம் முடித்து கடைகளை பூட்டி வீட்டிற்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து, சற்று நேரத்தில் தீ பிடித்து மளமள வென எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால் 2 கடைகளிலும் தீ அணையாமல் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
பல லட்சம் பொருட்கள் நாசம்
இதையடுத்து தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, துரைப்பாக்கம் ஆகிய பகுதி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாததால் தேனாம்பேட்டையில் இருந்து ‘ஸ்கை லிப்டர்’, தண்டையார்ப்பேட்டை, எழும்பூரில் இருந்து ‘போம்’ வாயிலாக தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இதையடுத்து, தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் 13 தீயணைப்பு வாகனங்கள் 6 மணி நேர போராடி நேற்று அதிகாலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில் கடையில் ஏற்றி வைத்த சாம்பிராணி வர்த்தியின் கனல் காரணமாக தீ பற்றியது தெரியவந்தது. இந்த தீ விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story