பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்


பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 10 Jan 2021 12:17 AM GMT (Updated: 10 Jan 2021 12:17 AM GMT)

பெரம்பலூர் வெங்கடேசபுரம் சாலையோரத்தில் உள்ள கடைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக வைத்துள்ளனர். இதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் விற்பனைக்காக காய்கறிகளை வைத்துள்ளனர். பொதுமக்கள் மார்க்கெட், சந்தைக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருகின்றனர். உழவர் சந்தையும், மார்க்கெட்டும் நகராட்சி கண்காணிப்பில் உள்ளது. பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதி சாலை ஏற்கனவே போக்குவரத்து இடையூறு நிறைந்து காணப்படும். இந்நிலையில் தற்போது மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் காய்கறி, பழங்கள் விற்பனைக்காக தரைக்கடைகள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன.

நகராட்சியும்-போலீசாரும் கண்டுகொள்ளவில்லை

மேலும் சாலையின் மையத்தில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் ஒலிப்பெருக்கி மூலம் கூவி, கூவி விற்பனை செய்யப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாலையோரத்தில் காய்கறி விற்பனை சந்தை போல் நடக்கிறது. இதனை நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்வதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆபத்தை உணராமல் பொதுமக்களும் சாலையில் நின்று காய்கறிகள், பழங்களை தேர்வு செய்து வாங்குகின்றனர்.

சாலையோர காய்கறி, பழக்கடைகளால் பாதசாரிகளும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அந்த கடைகளால் விபத்துகள் ஏற்படு்ம் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் வெங்கடேசபுரம் சாலையோரத்தில் காய்கறி, பழக்கடைகள், சரக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story