புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு வன்னியன்விடுதியில் 16-ந் தேதி நடக்கிறது


புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு வன்னியன்விடுதியில் 16-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jan 2021 6:05 AM IST (Updated: 10 Jan 2021 6:05 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு வன்னியன்விடுதியில் வருகிற 16-ந் தேதி நடைறெ உள்ளது.

புதுக்கோட்டை,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையொட்டி தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் தயரா கி வருகின்றனர். அதேநேரத்தில் காளைகளுக்கு உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். வாடிவாசல் பகுதியை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.

மாட்டுப்பொங்கல்

அதாவது வன்னியன்விடுதியில் உள்ள மாயன் பெருமாள் கோவிலில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். வன்னியன் விடுதி ஊர் பொதுமக்கள் மாயன் பெருமாள் கோவில் முன்பு கூட்டாக பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். 15-ந் தேதி மாலையில் கோவில் முன் மாடுகளை கட்டிவைத்து மாட்டுப்பொங்கலிட்டு சாமிக்கு படையல் போட்ட பின் மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வார்கள். அடுத்த நாள் 16-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் திருச்சி, திண்டுக்கல், தஞ்சை போன்ற பிற மாவட்டங்களிலிருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பங்கேற்க செய்வார்கள். மாவட்டத்தில் இந்த ஆண்டில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை பார்வையிட பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் மாடுபிடி வீரர்களும் தயாராக உள்ளனர். வன்னியன் விடுதி ஊர் முக்கியஸ்தர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன்களை அதன் உரிமையாளர்களுக்கு நேற்று வழங்கினர். இதனை வாங்க நீண்டவரிசையில் மாட்டின் உரிமையாளர்கள் நின்றிருந்தனர்.

போலீசாரிடம் அனுமதி

மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் விழா நடத்துபவர்கள் செய்து வருகின்றனர். வருகிற 17-ந் தேதி விராலிமலையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டையொட்டி மாடுகளுக்கான கயிறுகள், மணிகள் உள்ளிட்டவை விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Next Story