மராட்டிய பண்டாரா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சோகம்; அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ; 10 பச்சிளம் குழந்தைகள் பலி; விசாரணைக்கு உத்தரவு
பண்டாரா அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 10 பச்சிளம் குழந்தைகள் பலியானார்கள். இது பற்றி உயர்மட்ட விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.
நாக்பூரை அடுத்த பண்டாராவில் அந்த மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
பச்சிளம் குழந்தைகள்
4 மாடிகளை கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டில் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்பதால், ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் நர்சு ஒருவர் அந்த சிகிச்சைப்பிரிவு அறையில் இருந்து புகை வருவதை கண்டு திடுக்கிட்டார். உடனே கூச்சலிட்டபடி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
பரிதாப சாவு
அவர்கள் குழந்தைகளை காப்பாற்றும் பணியில் அவசர அவசரமாக ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். 7 குழந்தைகளை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
அதிக புகை மூட்டம் காரணமாக மற்ற குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. 10 பிஞ்சு குழந்தைகளை பிணமாக தான் மீட்க முடிந்தது. இதில் 3 குழந்தைகள் உடல் கருகியும், மற்ற 7 குழந்தைகள் மூச்சு திணறியும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 3 மாதத்திற்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்தது. மேலும் இதில் 8 பெண் குழந்தைகள். 2 ஆண் குழந்தைகள் எனவும் தெரியவந்தது.
கதறி அழுத பெற்றோர்
குழந்தைகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பெற்றெடுத்த பிள்ளைகள் தங்களை கண்விழித்து பார்க்கும் முன்பே கோர தீ கருகச்செய்து விட்டதை கண்டு நெஞ்சம் துடிக்க துடிக்க அழுது புரண்டனர். இந்த துயரத்தை கண்டவர்கள் நெஞ்சம் பதை பதைத்து போனது. துயர செய்தியை கேட்ட அனைவரது மனதிலும் சோக சுவடு பதிந்தது.
முன்னதாக தீ விபத்துக்கு உள்ளான பச்சிளம் குழந்தைகள் சிறப்பு வார்டு அருகே உள்ள பிரசவ வார்டில் இருந்த பெண்கள், மற்ற நோயாளிகள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்கப்பட்ட 7 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மின்சார கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
நெஞ்சை நொறுக்கும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு உத்தரவு
அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிர்ச்சி தெரிவித்தார். மேலும் அவர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு ஒட்டுமொத்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உயர் மட்ட கமிட்டியை அமைத்து உள்ளார். மாநில சுகாதாரத்துறை இயக்குனர் சதானா தயாடே தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 3 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரூ.5 லட்சம் நிவாரணம்
இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்களை தப்பிக்க விடமாட்டோம். நிச்சயம் தண்டிப்போம். உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பிஞ்சு குழந்தைகள் பலியானது நாடு முழுவதும் சோக அலையை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story