மழையால் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் தற்காலிக காமராஜர் மார்க்கெட்டுக்கு செல்ல பொதுமக்கள் அச்சம்


மழையால் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் தற்காலிக காமராஜர் மார்க்கெட்டுக்கு செல்ல பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 10 Jan 2021 3:27 AM GMT (Updated: 10 Jan 2021 3:27 AM GMT)

தொடர் மழை காரணமாக எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் செல்ல அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை குழந்தை ஏசு ஆலயம் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

இதே போல் தமிழகத்தில் திண்டுக்கல், பழனி, ஊட்டி, ஓசூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் கொண்டு வரப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது.

சேறும், சகதியுமாக காட்சி

தஞ்சை மாவட்டத்திலும் இந்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட்டில் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் மார்க்கெட்டிற்குள் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகளும் சிரமப்பட்டு தான் மார்க்கெட்டிற்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். சீர் வரிசை கொடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் காய்கறிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை தற்போது அவ்வளவாக நடைபெறவில்லை. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வர்த்தகம் பாதிப்பு

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘தஞ்சை அரண்மனை வளாகத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்ட போது தினமும் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். ஆனால் தற்காலிக மார்க்கெட்டில் செயல்பட தொடங்கியதில் இருந்து வர்த்தகம் நடைபெற்று வந்தது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் காய்கறி வியாபாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. தற்போது ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு தான் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதிலும் தற்போது மார்க்கெட்டில் காணப்படும் சகாதார சீர்கேடு காரணமாக அதுவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தற்காலிக மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உருவாகும் நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Next Story