கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற கோரி புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி 2-வது நாளாக தர்ணா


தர்ணா போராட்டம் நடந்த இடத்திலேயே முதல் அமைச்சர் நாராயணசாமி சாப்பிட்ட போது
x
தர்ணா போராட்டம் நடந்த இடத்திலேயே முதல் அமைச்சர் நாராயணசாமி சாப்பிட்ட போது
தினத்தந்தி 10 Jan 2021 9:44 AM IST (Updated: 10 Jan 2021 9:44 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரையில் தூங்கினார்
கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற கோரி மத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அண்ணா சிலை அருகே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகிறார்கள்.

நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டணி கட்சியினருடன் போராட்ட களத்திலேயே தரையில் படுத்து தூங்கினார். காலையில் எழுந்து குளித்துவிட்டு மீண்டும் போராட்ட களத்துக்கு திரும்பி போராட்டத்தை தொடர்ந்தார்.

கூட்டணி கட்சியினர் உரை
போராட்டகளத்தில் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அவ்வப்போது கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெறக்கோரி கோ‌‌ஷங்களும் எழுப்பப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு மற்றும் டீ, காபி போன்றவை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

துணை ராணுவம்
போராட்ட களத்தை சுற்றிலும் தொடர்ந்து 2-வது நாளாக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர் நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டனர். புதுச்சேரி போலீசாரே அங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story