கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து 63 கடைகள் எரிந்து சாம்பல்; பல கோடி ரூபாய் சேதம்


கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து 63 கடைகள் எரிந்து சாம்பல்; பல கோடி ரூபாய் சேதம்
x
தினத்தந்தி 10 Jan 2021 5:35 AM GMT (Updated: 10 Jan 2021 5:35 AM GMT)

கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 63 கடைகள் எரிந்து சாம்பலானது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரை உள்ளது. கடற்கரையில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த கடைகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை திறந்்திருக்கும்.

இங்கு வெளிநாட்டு பொருட்கள், பேன்சி பொருட்கள், கவரிங் நகைகள், அழகு சாதனங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், விதவிதமான துணி வகைகள், ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வியாபாரம் முடிந்த பிறகு வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு வீடுகளுக்கு சென்றனர்.

தீ விபத்து

நேற்று அதிகாலை 3 மணியளவில் பகவதியம்மன் கோவிலுக்கு பின்புறம் காந்தி மண்டபம் அருகில் உள்ள ஒரு கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த கடையில் தீப்பிடிக்க தொடங்கியது. அந்த நேரத்தில் கடல்காற்று பலமாக வீசியதால் தீ மள...மளவென அருகில் உள்ள கடைகளுக்கும் அடுத்தடுத்து பரவியது. இதனால், அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனை பார்த்த சிலர் வியாபாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கன்னியாகுமரி போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணபாபு தலைமையில் உதவி அதிகாரி இம்மானுவேல், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வெங்கட சுப்பிரமணியம் (கன்னியாகுமரி), துரை (நாகர்கோவில்), ஜீவன்ஸ்(குளச்சல்), ராஜா (தக்கலை) ஆகிேயார் தலைைமயில் 6 தீயணைப்பு வாகனங்களில் 60 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

63 கடைகள் நாசம்

எனினும் காந்தி மண்டபத்திற்கு பின்புறம் அமைந்துள்ள 38 கடைகள், கடற்கரை பகுதியில் இருந்த 21 கடைகள், 4 தற்காலிக கடைகள் என மொத்தம் 63 கடைகள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த கடைகளில் இருந்த அழகு சாதன பொருட்கள், வெளிநாட்டு பொருட்கள், துணிமணிகள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீ எரிந்து கொண்டிருந்த போது அங்குள்ள ஓட்டல்களில் இருந்த 3 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. அப்போது தீ பனைமரம் உயரத்திற்கு எழுந்தது. மேலும், கடைகளில் இருந்த 3 மினி ஜெனரேட்டர்களும் எரிந்து நாசமானது.

தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை 4 மணி நேரம் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்பும் அங்கு ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி கிடந்ததை பார்த்து வியாபாரிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

ஒவ்வொரு கடையிலும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் தீயில் கருகி சேதமானது. இந்த பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி இருக்கும் எனக்கூறப்படுகிறது.

தீ விபத்து காரணமாக சில கடைகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. ேமலும் எரிந்த பொருட்கள் அனைத்தும் குப்பை போல் குவிந்து கிடந்தன. இவற்றை கன்னியாகுமரி பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

போலீசார் விசாரணை

கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இந்த பயங்கர தீ விபத்து நேற்று கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story