கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு எலக்ட்ரீசியன் கொலை


கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு எலக்ட்ரீசியன் கொலை
x
தினத்தந்தி 10 Jan 2021 3:45 PM IST (Updated: 10 Jan 2021 3:45 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைப்போட்டு எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளியை சேர்ந்தவர் சென்னப்பன். இவருடைய மகன் திருப்பதி (வயது 39). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவருடைய செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை திருப்பதி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் பாஞ்சாலியூர் அருகே உள்ள ஒரு செங்கல் சூளை பக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த பகுதியில் உள்ள பனைமரத்தின் கீழ், திருப்பதி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட திருப்பதிக்கு, பூசாரிப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு திருப்பதி என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர், திருப்பதியை கண்டித்துள்ளார். ஆனாலும் திருப்பதி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் கணவர், திருப்பதியை கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story