தி.மு.க. மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம பெண் உதவியாளர் பணியிடை நீக்கம் - தாசில்தார் நடவடிக்கை


தி.மு.க. மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம பெண் உதவியாளர் பணியிடை நீக்கம் - தாசில்தார் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2021 4:50 PM IST (Updated: 10 Jan 2021 4:50 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம பெண் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெத்தநாயக்கன்பாளையம், 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் கல்யாணகிரி ஊராட்சி கிராம உதவியாளராக கல்பனா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேர்தல் வாக்குச்சாவடி நிலைய உதவி அலுவலர் ஆகவும் இருந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காட்டில் உள்ள முளுவி கிராமத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அதி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற தி.மு.க. மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அரசு ஊழியர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது நன்னடத்தை விதி மீறல் என்று கல்பனா மீது சேலம் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு புகார்கள் வந்தன.

அதனடிப்படையில் ஒரு அரசு ஊழியர் நன்னடத்தை விதியை மீறி அரசியல் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதால் ஊழியர் கல்பனாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பெண் ஊழியர் ஒருவர், தி.மு.க.விற்கு ஆதரவாக மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story