வங்கிகளை இணைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் - அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி
வங்கிகளை இணைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
சேலம்,
தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முதல் மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. அதிகாரிகள் சங்க தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி, ஊழியர் சங்கத் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில், அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ராஜீவன், பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வர ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வர ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் 686 மாவட்டங்களில் 43 கிராம வங்கிகள் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. இவை மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை வங்கிகளின் கீழ் இயங்குகிறது. இதில், லாபம் ஈட்டக்கூடிய வங்கியை ஏ பிரிவாகவும், சராசரியாக இயங்கும் வங்கிகளை பி பிரிவாகவும், நஷ்டத்தில் இயங்கும் வங்கியை சி பிரிவாகவும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பிரித்துள்ளன.
ஏ பிரிவு கிராம வங்கிகள் தொடர்ந்து இயங்கிடவும், பி பிரிவு வங்கிகளுக்கு அதிக முதலீடு வாங்கிடவும், சி பிரிவு வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம்.
கிராம வங்கி என்பது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. அதில் லாப நோக்கத்தை மத்திய அரசு எதிர்பார்ப்பது தவறான கொள்கையாகும். இந்த வங்கிகளை இணைத்து சில கார்ப்பரேட் கம்பெனிகளிடம் வழங்க முயற்சிப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
அதனால் கிராம வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலோ? தற்போதுள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் இருந்தாலோ நாங்கள் அகில இந்திய அளவில் போராட்டத்தை கையில் எடுப்போம். வங்கிகளை இணைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தற்போது விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டம் நியாயமானது. விவசாயிகளை பாதிக்கும் வழியிலேயே வேளாண் சட்டங்கள் உள்ளது என தெரிகிறது. அவர்களுக்கு ஆதரவாக கிராம வங்கி ஊழியர்களும் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தை நடத்தி உள்ளோம்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். கிராம வங்கிகளுக்கு அதிக முதலீடு வழங்கி விவசாயம் மற்றும் கிராமப்புற மக்கள் மேம்பாட்டிற்கு கடன் கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் தற்கொலையை தடுக்க இயலும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு வெங்கடேஸ்வர ரெட்டி கூறினார்.
Related Tags :
Next Story