கொரோனா ஊரடங்கால் மலேசியாவில் வேலை இழந்த திருச்சுழி வாலிபர் பரிதாப சாவு - உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம் மனைவி மனு


கொரோனா ஊரடங்கால் மலேசியாவில் வேலை இழந்த திருச்சுழி வாலிபர் பரிதாப சாவு - உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம் மனைவி மனு
x
தினத்தந்தி 10 Jan 2021 2:50 PM GMT (Updated: 10 Jan 2021 2:50 PM GMT)

மலேசியாவில் வேலைக்குச் சென்ற திருச்சுழியைச்சேர்ந்த வாலிபர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்தார் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்ய கோரி அவரது மனைவி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

விருதுநகர்,

திருச்சுழி அருகே உள்ள காரை குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மேலூரைச் சேர்ந்த தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். கடந்த 10 மாதங்களாக இவருக்கு வேலை இல்லாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவர் மனைவி கோகிலா தேவிக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கோகிலா தேவி தனது கணவரை அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு கடந்த அக்டோபர் மாதம் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட கருப்பசாமிக்கு அங்கு உரிய மருத்துவ வசதி கிடைக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவருடன் வேலை செய்தவர்கள் கருப்பசாமி மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தனர். இதனால் வேதனை அடைந்த கோகிலா தேவி செய்வதறியாது கதறி அழுதார்.

இந்நிலையில் கோகிலா தேவி தனது இரு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தனது கணவர் கருப்பசாமி உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்யும்படி கதறி அழுத படி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

கணவர் உடல்நிலை பாதிப்படைந்த உடனே அவரை வேலைக்கு அனுப்பிய தரகரை தொடர்பு கொண்டு தனது கணவரை சொந்த ஊருக்கு வர உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அவதூறாக பேசி உதவி செய்ய மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மனு கொடுத்த கோகிலா தேவி தனது இரு குழந்தைகளுடன் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story