அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,306 மாடுபிடி வீரர்கள் பதிவு - நாளை முதல் கொரோனா பரிசோதனை
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளுக்காக நேற்று இரு இடங்களிலும் சேர்த்து மொத்தம் 1,306 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். அவர்களுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
அலங்காநல்லூர்,
தைப்பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 14-ந் தேதியும், பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுரில் மாடுபிடி வீரர்களை பதிவு செய்யும் பணி தொடங்கியது.
இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவே முதலே மாடுபிடி வீரர்கள் அங்கு வந்து குவிந்திருந்தனர். இந்த பணி நேற்று மாலை வரை நடந்தது. இதில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து பதிவு செய்தனர்.
20 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், எடை 65 கிலோவுக்கு குறைவானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் உயரம் 5 அடி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு காய தழும்புகள், ரத்த அழுத்தம் மற்றும் உடலில் வேறு ஏதும் நோய் அறிகுறிகள் உள்ளதா? என்று மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அர்ச்சுணன்குமார் மேற்பார்வையில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, டாக்டர்கள் மோகன்குமார், ஹமிதாபேகம் உள்பட மொத்தம் 80 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.
காலையில் இருந்து மாலை வரை அலங்காநல்லூரில் 683 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ய வந்திருந்தனர். 655 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பாலமேட்டுக்கு 699 பேர் வந்திருந்தனர். 48 பேர் நீக்கப்பட்டனர். 651 பேர் பதிவு செய்யப்பட்டனர்.
அலங்காநல்லூர், பாலமேட்டில் சேர்த்து, மொத்தம் 1,306 வீரர்கள் நேற்று பதிவு செய்து அதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதுதவிர நாளை மற்றும் நாளை மறுநாள் பாலமேட்டிலும், 12, 13-ந் தேதிகளில் அலங்காநல்லூரிலும், மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை நடைபெறும். அதன் பின்னர் உரிய அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டு, போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள், விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கொரோனா கார ணமாக ஒவ்வொரு போட்டியிலும் 300 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் கொரோனா பரிசோதனைக்கு பின்பு எத்தனை வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்பது தெரியவரும்.
Related Tags :
Next Story