மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் திருமழிசை வரை நீட்டிப்பு; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம் + "||" + Extension from Poonamallee Bypass to Thirumalisai in Metro Rail Phase 2 project; Commencement of work on preparation of detailed project report

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் திருமழிசை வரை நீட்டிப்பு; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் திருமழிசை வரை நீட்டிப்பு; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
திருமழிசை துணைக்கோள் நகரம்
சென்னையில் நெருக்கடியை குறைக்கவும், நடுத்தர வர்க்கத்தினருக்கு சொந்தமாக குடியிருப்புகள் வாங்குவதற்காக, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் திருமழிசையில் ‘திருமழிசை துணைக்கோள் நகரம்' (சாட்டிலைட் டவுன்ஷிப்) அமைக்கப்பட இருக்கிறது. இங்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 311 ஏக்கர் நிலத்தில் ரூ.2 ஆயிரத்து 160 கோடி செலவில் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த துணைக்கோள் நகரம் குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால், தெருவிளக்குகள், சமுதாய கூடம், பள்ளி, ஆஸ்பத்திரி, பஸ் நிலையம், பூங்கா, விளையாட்டு திடல் போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது பூந்தமல்லியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமழிசைக்கு மெட்ரோ ரெயில் நீட்டிப்பு செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

30 ரெயில் நிலையங்கள்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 4-வது வழிப்பாதை கோயம்பேடு முதல் கலங்கரைவிளக்கம் வரை அமைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் விருகம்பாக்கம், வளசரவாக்கம் வழியாக ஆற்காடு சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நீட்டிப்பில் கலங்கரைவிளக்கம் முதல் மீனாட்சி கல்லூரி வரை சுரங்கத்தில் 12 சுரங்க ரெயில் நிலையங்களும், மீனாட்சி கல்லூரியில் இருந்து பூந்தமல்லி வரை உயர்த்தப்பட்ட பாதையில் 18 ரெயில் நிலையங்கள் உட்பட 30 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியளிக்கிறது.

திருமழிசை வரை நீட்டிப்பு
போரூர் சந்திப்பில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 7.945 கி.மீ. உயரமுள்ள பகுதியை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. எல்.ஆண்டு.டி நிறுவனம் மீனாட்சி கல்லூரியில் இருந்து போரூர் வரை ஒப்பந்தம் பெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில், சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு கோயம்பேட்டில் பணிமனை செயல்பட்டு வருகிறது. இதுதவிர சிறுசேரி சிப்காட், மாதவரம், விம்கோ நகரிலும் பணிமனை அமைய இருக்கிறது.

இதனை தொடர்ந்து 5-வது பணிமனை பூந்தமல்லியில் அமைய இருக்கிறது. இதற்காக தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. தற்போது 2-வது கட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 4-வது பாதையில் கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்க இருக்கும் மெட்ரோ ரெயில் பாதையை, திருமழிசை வரை நீட்டிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளன. இது இப்போது மிகவும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஆனால் திட்டத்தை நிறைவேற்றுவது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. எதிர்காலத்தில், திருமழிசை துணைகோள் நகரம் பயன்பாட்டுக்கு வரும் போது மெட்ரோ ரெயிலுக்கான இணைப்பு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.