அம்பர்நாத் பகுதியில் பட்டப்பகலில் நகைக்கடையில் துணிகரம்; துப்பாக்கி முனையில் ரூ.12 லட்சம் நகைகள் கொள்ளை


நகைக்கடையின் முன்பு போலீசார் விசாரணை நடத்திய காட்சி
x
நகைக்கடையின் முன்பு போலீசார் விசாரணை நடத்திய காட்சி
தினத்தந்தி 11 Jan 2021 12:16 AM GMT (Updated: 11 Jan 2021 12:16 AM GMT)

அம்பர்நாத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துவிட்டு தப்பினர். மேலும் கொள்ளையர்கள் தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்டனர்
அம்பர்நாத் சிக்லோலி பகுதியில் துல்சி சந்தியா காம்பிளக்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் கீழே பவானி என்ற நகைக்கடை உள்ளது. நேற்று பிற்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர். வாடிக்கையாளர் போல் கடைக்கு உள்ளே வந்த அவர்கள் திடீரென தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டனர்.

பின்னர் கையில் கிடைத்த நகைகளை அள்ளி தங்கள் பையில் போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர்.

தப்பி ஓட்டம்
அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சிலர் கொள்ளையர்கள் தப்பி செல்வதை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் கண்மூடித்தனமாக 7 ரவுண்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் ஊழியர்களான லஷ்மண் சிங் (வயது30), என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். மேலும் மற்றொரு கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் வசந்த் சிங்(26), பைரவ் சிங்(22) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரும் கொள்ளையடித்த நகையுடன் தாங்கள் கொண்டுவந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

4 பேருக்கு வலைவீச்சு
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 3 ஊழியர்களை மீட்டு உல்லாஸ்நகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நகைக்கடையில் இருந்து ரூ.12 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோனதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற 4 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர்களை பிடிக்க கல்யாண்- பத்லாப்பூர் சாலையில் வாகன சோதனை பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story