தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே மக்காச்சோள கதிர்கள் முளைக்க தொடங்கின பருத்தியும் பறிக்க முடியாமல் வீணாகிறது


தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே மக்காச்சோள கதிர்கள் முளைக்க தொடங்கின பருத்தியும் பறிக்க முடியாமல் வீணாகிறது
x
தினத்தந்தி 11 Jan 2021 12:20 AM GMT (Updated: 11 Jan 2021 12:20 AM GMT)

தொடர் மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு முன்பாகவே மக்காச்சோள கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. பருத்தியும் பறிக்க முடியாமல் செடியிலேயே வீணாகி வருகிறது.

பெரம்பலூர்,

மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியில் ஆண்டுதோறும் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. ஆற்றுப்பாசனம் இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் கடந்த ஆண்டு ஆவணி பட்டத்தில் விவசாயிகளால் அதிகளவில் மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மழையை நம்பியே இந்த பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது இந்த மழையே மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு எதிரியாக நிற்பது விவசாயிகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே மக்காச்சோள கதிர்கள், பருத்தி முற்றி வரும் சூழலில் நிவர் புயல், பின்னர் புரெவி புயல் என அடுத்தடுத்த புயல்களால் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டு வந்தன. அப்போது அதிக செலவு செய்து மழை பாதிப்பில் இருந்து மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை விவசாயிகள் மீட்டு கொண்டு வந்தனர்.

தொடர் மழையினால்...

இந்நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் அறுவடைக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள மக்காச்சோள பயிர் சாய்ந்து, மக்காச்சோள பயிரில் உள்ள கதிர்கள் அறுவடைக்கு முன்பாக முளைக்க தொடங்கியுள்ளன. இதேபோல் தொடர் மழையினால் பருத்தியும் பறிக்க முடியாமல் செடியிலேயே வீணாகி வருகிறது. பருத்தி கீழே விழுந்து மீண்டும் செடியாக முளைக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் படைப்புழு தாக்குதலினால் மக்காச்சோள பயிரும், பூச்சி கடியினால் பருத்தி பயிரும் பாதிக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் விளைவித்த மக்காச்சோளம், பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் போய்விட்டது.

முளைக்க தொடங்கி விட்டன

ஆவணி பட்டத்தில் பயிரிட்ட மக்காச்சோளத்திற்கு மருந்து அடித்தல் உள்ளிட்டவற்றுக்காக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஏற்கனவே புயல்களினால் மக்காச்சோளம், பருத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தொடர் மழையினால் மக்காச்சோளம், பருத்தி பயிர்களில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்காச்சோளம் கதிர்கள் மழையில் சாய்ந்து, வயலிலேயே முளைத்து வீணாகி வருகிறது.

பருத்தி பறிக்க முடியாமல் போவதால், பருத்தி கீழே விழுந்து மீண்டும் செடியாக முளைக்கிறது. பல்வேறு கிராமங்களில் மக்காச்சோள பயிர்களில் அறுவடைக்கு முன்பாகவே கதிர்களும், பருத்தியும் முளைக்க தொடங்கி விட்டன. எனவே மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தியை மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story