மும்பை மாநகராட்சி நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகர் சோனு சூட் ஐகோர்ட்டில் மனு


நடிகர் சோனு  சூட்
x
நடிகர் சோனு சூட்
தினத்தந்தி 11 Jan 2021 12:58 AM GMT (Updated: 11 Jan 2021 12:58 AM GMT)

மாநகராட்சி நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகர் சோனு சூட் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

நடிகருக்கு மாநகராட்சி நோட்டீஸ்
தமிழில் அருந்ததி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் சோனு சூட். மேலும் இந்தியில் தபாங், ஜோதா அக்பர், சிம்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இவர் கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து இருந்தார். நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான கட்டிடம் மும்பை ஜூகுவில் உள்ளது. அந்த கட்டிடத்தில், அவர் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து அவர் மும்பை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடா்ந்து இருந்தார். ஆனால் கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டில் மனு
இந்தநிலையில் சமீபத்தில் சோனு சூட் கட்டிடத்தில் மாநகராட்சியினர் சோதனை நடத்தினர். பின்னர் அவர்கள் ஜூகு போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், சோனு சூட் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நடிகர் சோனு சூட் தனக்கு எதிரான நோட்டீசை ரத்து செய்ய கோரியும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

சோனு சூட் தாக்கல் செய்த மனுவில், "மனுதாரர் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு செய்யும் வகையில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மராட்டிய மண்டல மற்றும் நகர திட்டமிடல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவில் தான் கட்டிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (திங்கட்கிழமை) நீதிபதி பிரித்விராஜ் சவான் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story