மராட்டிய அரசு அதிரடி நடவடிக்கை: தேவேந்திர பட்னாவிஸ், ராஜ் தாக்கரே உள்பட 11 தலைவர்களின் பாதுகாப்பு குறைப்பு; பா.ஜனதா கண்டனம்


தேவேந்திர பட்னாவிஸ்; ராஜ் தாக்கரே
x
தேவேந்திர பட்னாவிஸ்; ராஜ் தாக்கரே
தினத்தந்தி 11 Jan 2021 1:08 AM GMT (Updated: 11 Jan 2021 1:08 AM GMT)

பயங்கரவாதிகள் மற்றும் சமூகவிரோதிகளால் அச்சுறுத்தல் உள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தனிநபர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பல வகை பாதுகாப்பு
தலைவர்களுக்கு உள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மத்திய, மாநில மந்திரிகள், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே இந்த வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.

இதில், இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டு துளைக்காத கார் பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 உதவி இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், தலா 6 போலீசாருடன் 2 பாதுகாப்பு வாகனம், தேவைப்படும் நேரத்தில் கூடுதலாக 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இசட் பிரிவு பாதுகாப்பில் சுமார் 22 பாதுகாப்பு துறையினரும், ஒய் பிரிவு பாதுகாப்பில் 11 பேரும், எக்ஸ் பிரிவில் 2 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தலைவர்கள் பாதுகாப்பு குறைப்பு
இந்தநிலையில் மராட்டிய அரசு முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, உத்தரப்பிரதேச முன்னாள் கவர்னர் ராம்நாயக் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை அதிரடியாக குறைத்து உள்ளது. இதில் தேவேந்திர பட்னாவிசின் பாதுகாப்பு இசட் பிளசில் இருந்து ஒய் பிளசாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல அவரது மனைவி அம்ருதா, மகள் தீவிஜாவுக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பு எக்ஸ் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முன்னாள் கவர்னர் ராம்நாயக்கின் பாதுகாப்பு ஒய் பிளசில் இருந்து ஒய் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது ஒய் பிளசாக குறைக்கப்பட்டுள்ளது. மாநில லோக் ஆயுக்தா நீதிபதி எம்.எல். தகிலியானிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இசட் பிரிவில் இருந்து ஒய் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மத்திய மந்திரிகள் ராவ்சாகேப் தான்வே, ராம்தாஸ் அத்வாலே, முன்னாள் மாநில மந்திரி ஆஷிஸ் செலார் ஆகியோருக்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

நாராயண் ரானே
இதேபோல முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் மந்திரிகள் சுதீர் முங்கண்டிவார், ராஜ்குமார் படோலே, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பிரசாத் லாட், ராம் கதம், ஹரிபாவு பாக்டே ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாராயண் ரானே கூறுகையில், "எனது பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் எந்த புகாரும் இல்லை. ஆனால் எனக்கு எதுவும் நடந்தால் அதற்கு மாநில அரசே பொறுப்பு " என்றார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
இதேபோல பா.ஜனதா தலைவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அந்த கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யாய் கூறும்போது, " அரசின் மனநிலை எந்த நிலையில் உள்ளது என்பதை தான் இந்த முடிவு காட்டுகிறது. இது துரதிருஷ்டவசமானது. ஊரடங்கு காலத்தில் பட்னாவிஸ் மாநிலத்தின் மூலை முடுக்கிற்கு எல்லாம் சென்றார். ஆனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். பாதுகாப்பு குறைக்கப்பட்ட போதும் பட்னாவிஸ் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை சொல்லி கொண்டு இருப்பார்" என்றார்.

இது குறித்து தேவந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தான் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் தற்போது அரசியல் அடிப்படையில் அரசு பாதுகாப்பு கொடுக்கிறது. அச்சுறுத்தலே இல்லாதவர்களுக்கு கூட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நான் மக்களின் நபர். பாதுகாப்பு குறைக்கப்பட்டது மக்களை நான் சந்திப்பதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார்.

எனினும் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பை 5 மூத்த உயர் அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்தது. அதன் பிறகு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்கப்பட்டது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் சரத்பவார், அஜித்பவாருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. சரத்பவார் தனது பாதுகாப்பை குறைக்க கடிதம் எழுதி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவார் மனைவி
மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மாநிலத்தில் மொத்தம் 11 பேரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 16 பேரின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. 2 பேருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதிதாக 13 பேருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பாதுகாப்பு வழங்கப்பட்டவர்களில் துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார், சிவசேனா இளைஞர் அணி செயலாளரும், உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவின் உறவினரான வருண் சர்தேசாய் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். அவர்களுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல மூத்த வக்கீல் உஜ்வால் நிகம், காங்கிரஸ் மூத்த தலைவர் சத்ருகன் சின்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story