வருகிற 14-ந் தேதி பண்டிகையையொட்டி புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வினியோகம்


வருகிற 14-ந் தேதி பண்டிகையையொட்டி புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வினியோகம்
x
தினத்தந்தி 11 Jan 2021 1:20 AM GMT (Updated: 11 Jan 2021 1:20 AM GMT)

புதுக்கோட்டையில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்களை குடும்பத்தினர் வினியோகிக்க தொடங்கியதால் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

புதுக்கோட்டை,

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தை மாதம் 1-ந் தேதி சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை பராம்பரியமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பினை விரும்பி சாப்பிடுவது உண்டு.

மேலும் பொங்கல் பண்டிகையன்று மண்பானையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் காய்கறிகளை படையலிட்டும், அறுவடை செய்த நெற்கதிர்கள், நெல்லினை வைத்தும் வீடுகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். நகர்ப்புறத்தில் சிலர் சில்வர் அல்லது வெண்கல பாத்திரத்தில் பொங்கலிடுவாார்கள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப் படுகிறது. பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

புதுமண தம்பதிகள்

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இந்துக்களில் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு சீர் கொடுப்பது வழக்கம். அதாவது கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தார், பொங்கல் பொருட்கள் மற்றும் பானைகள் உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி பெண் வீட்டார் குடும்பத்தோடு தங்களது மாப்பிள்ளை வீட்டில் கொடுப்பது முறை.

அதன்படி வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க தொடங்கி உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் பலர் பொங்கல் சீராக கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தார் உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்று கொடுத்தனர். சீர் பொருட்களை ஆட்டோ, கார், வேன்களில் ஏற்றிச்சென்று மாப்பிள்ளை வீட்டில் கொடுத்ததை பார்க்க முடிந்தது.

கரும்பு கட்டுகள்

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை, சாந்தநாத சாமி கோவில் அருகே உள்பட சாலையில் ஆங்காங்கே விற்பனைக்காக கரும்புகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் கரும்புகள் விற்பனை நடைபெற்றது. 10 எண்ணிக்கையிலான ஒரு கட்டு கரும்பு ரூ.200 முதல் விற்பனையானது. கறம்பக்குடி, செக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வினியோகிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் கூட்டுறவுத்துறையினர் கரும்புகளை நேரிடையாக கொள்முதல் செய்துள்ளனர். அரிசி குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் கொள்முதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வியாபாரிகளும் விற்பனைக்காக கரும்பினை விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இதனால் இந்த ஆண்டு கரும்பு தட்டுப்பாடு ஏற்படுகிற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வாழைத்தார்கள்

மஞ்சள் கொத்துகளை பொறுத்தவரை ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாழைத்தர்களில் பூவன், ரஸ்தாலி, செவ்வாழை உள்ளிட்ட தார்களின் விலை சற்று ஏற்றம் அடைந்துள்ளது. பொங்கல் பானைகள் சந்தைப்பேட்டை உள்பட ஆங்காங்கே சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு பானை ரூ.120 முதல் விற்பனையாகுகிறது. பொங்கல் பண்டிகையொட்டி இவற்றின் விற்பனை மும்முரமாக நடந்துவருகிறது.

Next Story