பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் மாநில கூட்டத்தில் தீர்மானம்


பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் மாநில கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 11 Jan 2021 2:16 AM GMT (Updated: 11 Jan 2021 2:16 AM GMT)

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடந்த இடைநிலை ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சங்கர் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காத்திருப்பு போராட்டம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் 2005 முதல் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது சங்க நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 22-ந் தேதி சென்னையில் பள்ளி கல்வித் துறை இயக்குனர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொருளாளர் பிரகாசம், முன்னாள் மாநில தலைவர் தியாகராஜன், திருச்சி மாவட்ட தலைவர் சத்யநாராயணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்

தொடக்கத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் பழனிசாமி வரவேற்றார். முடிவில் மாநில இணை செயலாளர் ஸ்டீபன் நன்றிகூறினார்.

Next Story