திருச்சி அருகே குஷ்பு பங்கேற்ற பா.ஜ.க. பொங்கல் விழாவில் தள்ளுமுள்ளு மூதாட்டி காயம் + "||" + Khushbu participates in BJP rally near Trichy Grandmother injured while pushing during Pongal festival
திருச்சி அருகே குஷ்பு பங்கேற்ற பா.ஜ.க. பொங்கல் விழாவில் தள்ளுமுள்ளு மூதாட்டி காயம்
திருச்சி அருகே கோப்பு கிராமத்தில் குஷ்பு பங்கேற்ற பொங்கல் விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மூதாட்டி காயமடைந்தார்.
திருச்சி,
தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஏராளமான பெண்கள் அடுப்பில் பொங்கல் வைத்து தயார் நிலையில் இருந்தனர். சிலம்பாட்டம், கரகாட்டம் உள்பட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஷ்பு மாலை 5 மணி அளவில் வந்தார்.
மூதாட்டி காயம்
அப்போது அவரை வரவேற்க வந்தவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி (வயது 60) என்ற மூதாட்டி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் குஷ்பு பேசினார். அதன் பின்னர் குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கு சவால்
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றிபெறும் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது கருணாநிதி இல்லாத ஒரு தேர்தலை தி.மு.க. சந்திப்பது மிகப்பெரிய சவால். கருணாநிதியோடு, ஸ்டாலினை ஒப்பிடவே முடியாது. கருணாநிதி விட்டு சென்ற இடத்தை ஸ்டாலின் மட்டுமல்ல எவராலும் நிரப்ப முடியாது.
4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை பார்க்கும்போது மிக நன்றாக உள்ளது. குறை சொல்லும் அளவுக்கு இல்லை பழனிசாமி ஆட்சி. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத ஒரு தேர்தலை சந்தித்தாலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாக உள்ளன.
சமூக வலைதளங்கள் தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
பொய் பிரசாரம்
நாட்டில், விவசாயிகள் 70 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் 10 சதவீத விவசாயிகள் தான் டெல்லியில் போராடுகின்றனர். மத்திய விவசாய மந்திரி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வேளாண் சட்டங்களை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், சிலர் பொய்யான பிரசாரங்கள் செய்து வருகின்றனர். 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்த திட்டங்கள் தான் புதிய வேளாண் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தவறான தகவல்களை பரப்பி விவசாயிகளை குழப்பக் கூடாது.
ரஜினியின் தோழி
தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக, திருப்தியாக உள்ளனர். மழை, வெள்ளம் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். கூட்டணி அமைப்பது, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது எல்லாவற்றையும் கட்சி தலைமை தான் அறிவிக்கும். ரஜினியிடம் தோழியாக, சக நடிகையாக பேசியிருக்கிறேன். அரசியல் பேசியதில்லை.
பெண்களை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உதயநிதி கூறியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்து நான் ஏன் வெளியே வந்தேன் என்பது மக்களுக்கு இப்போது புரிய தொடங்கியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர். ராமசுப்பு, மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல் தெரிவித்துள்ளார்.