வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக காவிரி விவசாய சங்கத்தினர் நீதி கேட்டு நெடும்பயணம்


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக காவிரி விவசாய சங்கத்தினர் நீதி கேட்டு நெடும்பயணம்
x
தினத்தந்தி 11 Jan 2021 2:28 AM GMT (Updated: 11 Jan 2021 2:28 AM GMT)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் 2-வது நாளாக நீதி கேட்டு நெடும்பயணம் திருவாரூரில் தொடங்கியது.

திருவாரூர்,

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் வேதாரண்யத்திலிருந்து தஞ்சாவூர் வரை விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பிரசார பயணம் தொடங்கி மயிலாடுதுறையில் நிறைவடைந்தது.

நேற்று 2-வது நாளாக திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கியது. பிரசார பயணத்திற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் வேலுடையார் கல்வி நிறுவன தலைவர் தியாகபாரி, மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., சங்கத்தின் மாநில துணை செயலாளர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

அப்போது விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை

மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு

ரூ.2,500 வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட

வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றனர். முன்னதாக திருத்துறைப்பூண்டிக்கு வந்த பிரசார குழுவினருக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.

Next Story