மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட காவிரி விவசாயிகள் நெடும்பயணம் தஞ்சை வந்தது வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல் + "||" + The long journey of the Cauvery farmers who left Vedaranyam came to Tanjore to demand the repeal of the agricultural laws

வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட காவிரி விவசாயிகள் நெடும்பயணம் தஞ்சை வந்தது வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல்

வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட காவிரி விவசாயிகள் நெடும்பயணம் தஞ்சை வந்தது வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி வேதாரண்யத்திலிருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தொடங்கப்பட்ட நீதி கேட்டு நெடும் பயணம் தஞ்சைக்கு நேற்று இரவு வந்தது.
தஞ்சாவூர்,

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேதாரண்யத்தில் நீதி கேட்டு நெடும் பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது.


இந்த பயணம் நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், சாலியமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு சென்று தஞ்சைக்கு நேற்று இரவு வந்தது. தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே இருந்து பயணக்குழுவினர் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக பெரியகோவில் அருகே உள்ள ராஜராஜசோழன் சிலையை வந்தடைந்தனர்.

பாடையை தூக்கி வந்தனர்

ஊர்வலத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கொல்லப்படுகின்றனர் என்பதை வலியுறுத்தும் வகையில் பாடையில் ஒருவரை படுக்க வைத்து தூக்கி வருவது போல் எடுத்து வந்தனர். இதில் மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, துணை செயலாளர் செந்தில்குமார், மாநில பொருளாளர் ஸ்ரீதர், தஞ்சை மாவட்ட தலைவர் மணி மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நெடும்பயணம் மேற்கொண்டோம். இதில், லட்சக்கணக்கான விவசாயிகள், பொதுமக்களை சந்தித்தோம். அவர்களும் ஆதரவு தெரிவித்தனர். எனவே, மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். மறுத்தால் தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம்.

தள்ளுபடி செய்ய வேண்டும்

தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருவது தவறுதான். கடந்த காலங்களில் இதுபோல ஆதரித்து, விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெற்ற வரலாறு இருக்கிறது. எனவே, தமிழக அரசு ஆதரவை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக காவிரி விவசாய சங்கத்தினர் நீதி கேட்டு நெடும்பயணம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் 2-வது நாளாக நீதி கேட்டு நெடும்பயணம் திருவாரூரில் தொடங்கியது.