பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை திருவையாறில் குஷ்பு பேட்டி


பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை திருவையாறில் குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2021 3:33 AM GMT (Updated: 11 Jan 2021 3:33 AM GMT)

பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என திருவையாறில் குஷ்பு கூறினார்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு தேரடி திடலில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் பூண்டி வெங்கடேசன், மாவட்ட செயலாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநிலத்துணைத்தலைவர் சிவக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு கலந்து கொண்டார். பின்னர் அவர் திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி

நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. எங்கள் கட்சிக்கு விதிமுறைகள் உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டியிட தயாராக உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் புதிதாக தி.மு.க.வில் பொறுப்புக்கு வந்துள்ளார். அவர் பெண்களை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார். நாம் அதைப்பற்றி பேசவேண்டியதில்லை

கருத்து வேறுபாடு இல்லை

ப.சிதம்பரம் காங்கிரஸில் இருந்துவிலகி த.மா.கா.வில் இணைந்து தனியாக கட்சி தொடங்கி போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். அவர் தனது மகனுக்கு கட்சியில் யாரும் போட்டியாக வந்து விடக்கூடாது என்பதற்காக எங்களை போன்றவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கடுமையான சட்டம் இயற்றும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடரும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை சரியாக படித்து பார்த்தால் இது விவசாயிகளுக்கு சாதகமான மசோதா என புரியும். இவ்வாறு குஷ்பு கூறினார். முன்னதாக தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, அகரப்பேட்டை ஆகிய பகுதிகளில் பா.ஜனதா கட்சி கொடியை குஷ்பு ஏற்றி வைத்தார். அப்போது பா.ஜனதா நகர ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story