கொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது கன்னியாகுமரி வியாபாரிகள் உருக்கம்


கொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது கன்னியாகுமரி வியாபாரிகள் உருக்கம்
x
தினத்தந்தி 11 Jan 2021 3:40 AM GMT (Updated: 11 Jan 2021 3:40 AM GMT)

கொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது என கன்னியாகுமரி வியாபாரிகள் கண்ணீர் மல்க வேதனையை வெளிப்படுத்தினர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரையில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 கடைகள் எரிந்து சாம்பலானது. கடைகளில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. விபத்து ஏற்பட்ட இடத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ெசன்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினர்.

தீ விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் வளாக சிறு வியாபாரிகள் நலசங்க தலைவர் தங்கதுரை கூறியதாவது:-

பொங்கல் பண்டிகை

நான் கன்னியாகுமரி கடற்கரையில் 35 ஆண்டுகளாக பேன்சி கடைகள் நடத்தி வருகிறேன். கொ ரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் கடைகளை மீண்டும் திறந்து வியாபாரத்தை தொடங்கினோம். பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டி வட்டிக்கு கடன் வாங்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கி இருப்பு வைத்திருந்தேன். நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் தீ விபத்து எங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இதுபோல் பலரும் வாங்கி வைத்திருந்த பொருட்களும் நாசமானது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

தீயின் வெப்பத்தால் நெருங்க முடியவில்லை

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வியாபாரிகள் சங்க தலைவர் அஜி என்கிற சதீஷ் கூறியதாவது:-

நான் சில ஆண்டுகளாக கடற்கரையில் பேன்சி கடை நடத்தி வருகிறேன். நேற்று முன்தினம் அதிகாலையில் கடை ஊழியர் பாண்டியன் கடை முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஏதோ பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டு கண்விழித்துள்ளார். கடற்கரையின் மேல்பகுதியில் உள்ள கடைகள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனே, நானும் கடற்கரைக்கு விரைந்தேன். பின்னர், தீயை அணைக்க முயன்றோம். ஆனால், கடற்கரை காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததால் தீ மள...மள...வென வேகமாக அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கு பரவியது. எனது கடையில் தீ பரவுவதை தடுக்க பலவாறு முயன்றேன். ஆனால் தீயின் வெப்பம் காரணமாக அருகில் செல்ல முடியவில்லை. இதனால், கடைகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்னியாகுமரியை சேர்ந்த வியாபாரி விஜய் என்ற விஜயகுமார் கூறியதாவது:-

நிரந்தர கடை கட்டி தர வேண்டும்

நான் கன்னியாகுமரி கடற்கரையில் 2 சங்கு, பாசி பொருட்கள் விற்பனை கடையும், ஒரு பச்சை குத்தும் கடையும் நடத்தி வருகிறேன். நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் எனது கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலானது. சங்குகள் அனைத்தும் தீயில் கருகின.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தோம். தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து எங்கள் வாழ்வில் மீண்டும் பேரிடியாக விழுந்ததுள்ளது. எனவே, விபத்து ஏற்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்க வேண்டும். அத்துடன் தீ விபத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு கான்கிரீட் கூரையுடன் கூடிய நிரந்தர கடைகள் கட்டி தர வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்பே நாங்கள் கடைகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்னியாகுமரியை ேசர்ந்த வியாபாரி சரவணன் கூறியதாவது:-

நிவாரணம் வேண்டும்

நான் பல ஆண்டுகளாக பேன்சி, வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறேன். கொ ரோனா ஊரடங்கு காரணமாக பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் கடைகளை திறந்து மீண்டும் வியாபாரம் செய்ய தொடங்கினோம். பொங்கல் வியாபாரத்துக்காக மனைவி மற்றும் குழந்தைகளின் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கி இருப்பு வைத்திருந்தேன். நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கடைகளை கட்டி தருவது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story