போலீசாருடன் பொதுமக்கள் இணைந்தால் தான் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும்: ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி


போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன்
x
போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன்
தினத்தந்தி 11 Jan 2021 5:04 AM GMT (Updated: 11 Jan 2021 5:04 AM GMT)

போலீசாருடன் பொதுமக்கள் இணைந்தால் தான் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. கூறினார்.

நல்லுறவு கூட்டம்
இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் கிராமப்புற காவலர் திட்டம், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் டி.ஐ.ஜி. மயில்வாகனன் கிராமப்புற போலீஸ்காரர் அழகு பூபதியை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும்
போலீசாரும் பொதுமக்களும் இணைந்தால் தான் குற்றச் சம்பவங்களை முழுமையாக தடுக்கவும், குற்றவாளிகளை பிடித்து தண்டனை பெற்றுத் தரவும் முடியும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் போலீசாருடன் இணைந்து குற்ற சம்பவத்தின் பின்னணியின் தகவல்களை தெரிவிக்க வேண்டும்். கிராமப்புற மக்களிடம் தொடர்பில் இருப்பதற்காகவே போலீஸ்காரர் அழகு பூபதியை நியமிக்கப்பட்டு உள்ளார். உங்கள் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பார்.

குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களின் விவரங்களை ரகசியம் காத்து குற்றத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இந்த திட்டம் கோட்டையூர் கிராமம் அதன் கிளை கிராமங்களான சிறுபாலை, புலியூர், தெற்கு கீரனூர், தரிகொம்பன், வாணி ஆகிய பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து கிராம மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் நன்றி கூறினார்.

கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாரதிராஜன், ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கோட்டையூர் கூட்டுறவு வேளாண்மை வங்கி தலைவர் சைமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அனிதா சைமன், அமுதா பெரியசாமி, நாகேஸ்வரன், திருப்பதி, பாம்கோ முன்னாள் பொது மேலாளர் தோமையார், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்,

Next Story