உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு அரசு பள்ளியில் பணி வழங்கவேண்டும்; தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வலியுறுத்தல்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தபோது
x
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தபோது
தினத்தந்தி 11 Jan 2021 5:17 AM GMT (Updated: 11 Jan 2021 5:17 AM GMT)

உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வழங்கவேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். 

மாநில பொருளாளர் அம்பை ஆ.கணேசன், மூத்தோரணி அமைப்பாளர் இருதயராசன், மகளிரணி அமைப்பாளர் மதனாஎழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் பிரசன்னா, திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் தமிழ்மணி ஆகியோர் வரவேற்றனர். மாநில தலைமை நிலைய செயலாளர் வரதராசன் அறிக்கை வாசித்தார். பொதுச் செயலாளர் தியோடர்ராபின்சன் விளக்கவுரையாற்றினார்.

அரசு பள்ளியில் பணி...
கூட்டத்தில் மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இணையான ஊதியத்தினை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும், சென்னை தலைமையகத்தில் பாவலருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவுதல், மன்ற மாநில மாநாடு ஆகியவற்றுக்கு தி.மு.க. தலைவரையும், கட்சி முன்னோடிகளையும் அழைப்பது, ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும். பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story