சின்னசேலம் அருகே மழைநீ்ரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம், கீழ்குப்பம், ஈசாந்தை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வாய்க்கால் மற்றும் ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர் சாய்ந்து கிடப்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் தரையில் சாய்ந்த நெல் மணிகள் முளைத்து வருவதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது நீராதாரத்தை பயன்படுத்தி கடன் பட்டு விவசாயம் செய்தும் பலன் எதிர்பார்க்கும் நேரத்தில் 50 சதவீத மகசூலாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர். அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களும் மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சின்னசேலம் பகுதியில் மழை நீரால் சேதம் அடைந்துள்ள பயிர்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.