உளுந்தூர்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றவர் நண்பருடன் கைது


உளுந்தூர்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றவர் நண்பருடன் கைது
x
தினத்தந்தி 11 Jan 2021 5:30 AM GMT (Updated: 11 Jan 2021 5:30 AM GMT)

உளுந்தூர்பேட்டையில் லாட்டரி சீட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டரை அடித்து கொலை செய்ய முயன்றவரை அவரது நண்பருடன் போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பழனி, மச்சவளவன், மணிகண்டன் மற்றும் பாலு ஆகிய 4 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(45) என்பவர் இவர்களுக்கு தலைவனாக செயல்பட்டு வந்ததும், அவர் தற்போது உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் உள்ள சினிமா தியேட்டர் அருகே பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

இதையடுத்து செந்தில்குமாரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் குறிப்பிட்ட சினிமா தியேட்டர் அருகே விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்ட செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் வாசு ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் திடீரென அருகே கிடந்த உருட்டுக்கட்டையால் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை தாக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் லாவகமாக நகர்ந்து கொண்டார். உடனே செந்தில்குமார், வாசு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story