பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயக்குடியில் மண்பானை தயாரிப்பு பணிகள் மும்முரம்


ஆயக்குடியில் மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளியை படத்தில் காணலாம்.
x
ஆயக்குடியில் மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளியை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 11 Jan 2021 5:39 AM GMT (Updated: 11 Jan 2021 5:39 AM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி அருகே ஆயக்குடியில் மண்பானை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தைப்பொங்கல்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ள சூரியபகவான், காளை, பசுமாடு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். நகர் பகுதியிலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

நகர் பகுதியில் சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினாலும், கிராமப்புறங்களில் இன்னமும் பழமை மாறாமல் இன்று வரை மண் பானையில் பொங்கல் வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெற்றோர் தங்களது மகள் வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசையாக மண்பானையே வழங்குகின்றனர். எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் புதிதாக மண் பானைகளை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

மண்பானை
பழனி பகுதியில் மண் பானை தயாரிப்பு என்பது ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலேயே அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு புதுஆயக்குடியில் மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சிறியது முதல் பெரிய அளவிலான மண் பானைகள் வரை தயாரிக்கப்படுகிறது. பானைகளின் அளவை பொறுத்து விலை மாறுபடுகிறது. ஒரு பானை ரூ.40 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பானை தயாரிப்பு குறித்து புதுஆயக்குடியை சேர்ந்த தொழிலாளியான ஆறுமுகத்திடம் கேட்டபோது, தற்போதுள்ள சூழலில் பானைகள் தயாரிப்புக்கான மண் போதிய அளவில் கிடைப்பதில்லை. மேலும் பானைகள் தயாரிப்பு செலவை கணக்கிடும் போது, கிடைக்கும் விலை எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை. இதனால் பானை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. எனவே மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கும் மண்பானையை அரசே கொள்முதல் செய்து வினியோகம் செய்ய வேண்டும் என்றார்.

Next Story