மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் பலியான ராணுவ வீரரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம்; தேனி மாவட்ட கலெக்டர் அஞ்சலி + "||" + Body of a soldier killed in Kashmir, cremated with state honors; Tribute to Theni District Collector

காஷ்மீரில் பலியான ராணுவ வீரரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம்; தேனி மாவட்ட கலெக்டர் அஞ்சலி

காஷ்மீரில் பலியான ராணுவ வீரரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம்; தேனி மாவட்ட கலெக்டர் அஞ்சலி
காஷ்மீரில் பலியான ராணுவ வீரரின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கலெக்டர் அஞ்சலி செலுத்தினார்.
ராணுவவீரர் பலி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் குருசாமி. அவருடைய மகன் ஆறுமுகம் (வயது 38). இவர், இந்திய ராணுவத்தில் சேர்ந்து 18 ஆண்டுகளாக பணியில் இருந்தார். தற்போது அவர், நாயக் பதவியில் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், 10 வீரர்களுடன் காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஆறுமுகத்திற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதையொட்டி ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம் அங்கு சிகிச்சை பலன் இன்றி கடந்த 8-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

கலெக்டர் அஞ்சலி
இதையடுத்து இறந்த ராணுவ வீரரின் உடல், விமானம் மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அவரது உடல் நேற்று ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான வடுகப்பட்டிக்கு வந்தது. அங்கு உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்கு செய்தனர்.

பின்னர் அவரது உடலுக்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உடல் தகனம்
இதைத்தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ராணுவ உயர் அதிகாரிகள், வடுகப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு ஆறுமுகத்தின் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி மடிக்கப்பட்டு அவரது மனைவி பாண்டிராணியிடம் வழங்கப்பட்டது.

பின்னர் வடுகப்பட்டி மயானத்தில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆறுமுகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரரின் இறுதி சடங்கில் உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.