விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு: தீவு போல் மாறிய கிராமத்துக்கு படகில் சென்று உணவு வழங்கிய போலீசார்


விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு: தீவு போல் மாறிய கிராமத்துக்கு படகில் சென்று உணவு வழங்கிய போலீசார்
x
தினத்தந்தி 11 Jan 2021 5:51 AM GMT (Updated: 11 Jan 2021 5:51 AM GMT)

விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தீவு போல் மாறிய சொட்டவனம் கிராமத்துக்கு படகில் சென்று போலீசார் உணவு வழங்கினர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே சொட்டவனம் கிராமம் உள்ளது. மணிமுக்தாற்றின் மறுகரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இவர்கள் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பாலம் இல்லாததால், ஆற்றில் நீந்தி தான் அக்கரைக்கு செல்ல முடியும். உணவு பொருட்களை மரக்கட்டைகளை அமைத்து, அதில் தான் எடுத்து வர வேண்டும். இவர்களுக்கு இக்கரையில் உள்ள இளைஞர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியதாலும், கோமுகி அணை மற்றும் மணிமுக்தா அணை திறக்கப்பட்டதாலும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன் காரணமாக சொட்டவனம் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து அந்த கிராமம் தனித்தீவுபோல் மாறி உள்ளது. மேலும் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்தனர்.

இளைஞர்கள் உதவி

இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி இளைஞர்கள், ஆற்றில் மரக்கட்டைகளை போட்டு, அதை பிடித்துக் கொண்டு ஆபத்தை பொருட் படுத்தாமல் வெள்ளத்தில் நீந்தியபடி சொட்டவனம் கிராமத்துக்கு சென்று, உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மீண்டும் அதேபோல் மரக்கட்டைகளை பிடித்தபடி கரைக்கு திரும்பினர்.

உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் நீந்தி சென்று உணவளிக்கும் இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தினந்தோறும் அப்பகுதி இளைஞர்கள் இப்பணியை வழக்கமாக செய்து வருகின்றனர்.

போலீசார் உணவு வழங்கினர்

இது தொடர்பான வீடியோ முகநூல், வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கடலூர் மாவட்ட போலீசாரின் படகு மீட்பு குழுவை அனுப்பி, அவர்களுக்கு உதவ அறிவுறுத்தினார்.

இதையடுத்து போலீசாரின் மீட்பு குழுவினர் தங்களின் படகு மூலம் மணிமுக்தா ஆற்றை கடந்து சென்று சொட்டவனம் கிராம மக்களுக்கு உணவு, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருவோரை தங்கள் படகு மூலம் இக்கரைக்கு அழைத்து வருகின்றனர்.

வெள்ளம் வடியும் வரை அப்பகுதியில் படகை நிறுத்தி, அவர்களுக்கு உதவி செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story