வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா: வேடிக்கை பார்த்தவர்கள் மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி 30 பேர் படுகாயம்


வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா: வேடிக்கை பார்த்தவர்கள் மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி 30 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Jan 2021 6:07 AM GMT (Updated: 11 Jan 2021 6:07 AM GMT)

வேப்பனப்பள்ளி அருகே நடந்த எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்தவர்கள் மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

இந்த விழாவிற்காக சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. இந்த நிலையில் எருது விடும் விழாவை காண்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள வீடு ஒன்றின் கான்கிரீட் மேல் தளத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர். சுமார் 30 பேர் அந்த தளத்தில் நின்று பார்க்க, 20-க்கும் மேற்பட்டவர்கள் கீழே திண்ணையில் அமர்ந்து இருந்தனர்.

சுவர் இடிந்து 2 பேர் பலி

அப்போது திடீரென வீட்டின் மேற்புற சுவர் இடிந்து, கீழே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தார்கள். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் பெரிய, பெரிய அளவிலான சுவர்கள் அவர்கள் மீது விழுந்து கிடந்ததால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதில் நேரலகிரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் மேகாஸ்ரீ (வயது 8), எட்டிப்பள்ளியைச் சேர்ந்த முனிபாலா (62) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் வேப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கீதா (35), லாவண்யா (24), ஷேபா (40), ராமமூர்த்தி (20), நாகம்மா (35), அக்சயா (7), அருண் (24), நந்தினி (10), யோகேஷ் (10), அஸ்வத்தம்மா (60), சிவா (6), நாராயணராவ் (21), கலைவாணி (12), சைலா (25), ராமரத்தினம் (38), லதா (35), நதியா (8), நட்சத்திரா (5), குமாரி (5) ஆகிய 19 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

முருகன் எம்.எல்.ஏ. ஆறுதல்

அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய நிலையில் அளவுக்கு அதிகமாக மக்கள் சுவர் மீது நின்றதால் பாரம் தாங்காமல் உடைந்து விழுந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பி.முருகன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களை கேட்டுக் கொண்டார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதே போல விபத்தில் பலியானவர்களுக்கு அரசின் மூலம் உதவிகளை பெற்று தருவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

5 பேர் கைது

இந்தநிலையில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக நேரலகிரியை சேர்ந்த பத்மநாபன் (50), அம்மாசியப்பன் (65), திம்மராயப்பன் (50), முனிராஜ் (67), நாகராஜ் (51) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நாகராஜ், சிவா ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story