சங்ககிரியில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.9 லட்சம் திருட்டு ஓடும் பஸ்சில் 5 பேர் கும்பல் கைவரிசை


சங்ககிரியில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.9 லட்சம் திருட்டு ஓடும் பஸ்சில் 5 பேர் கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 11 Jan 2021 6:26 AM GMT (Updated: 11 Jan 2021 6:26 AM GMT)

சங்ககிரியில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஓடும் பஸ்சில் ரூ.9 லட்சத்தை திருடிய 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சங்ககிரி,

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 65). இவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் ஆவார். இவரும், இவருடைய மனைவி ராஜேஸ்வரியும் (60) ஈரோட்டில் உள்ள மகள் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து சேலம் பஸ் நிலையத்துக்கு நேற்று மாலை அவர்கள் இருவரும் வந்தனர். அங்கு அவர்கள் ஈரோடு செல்லும் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். சங்ககிரி புதிய பஸ் நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு அந்த பஸ் வந்து நின்றது.

ரூ.9 லட்சம் திருட்டு

அப்போது அந்த பஸ்சில் 5 பேர் கொண்ட கும்பல் ஏறியது. அவர்கள் வீரமணியும், ராஜேஸ்வரியும் அமர்ந்து இருந்த இருக்கை அருகே நின்று கொண்டு தம்பதியிடம் பேச்சு கொடுத்தனர். ஒரு கட்டத்தில், உங்கள் பணம் 5 ரூபாய் கீழே கிடக்கிறது என அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் கூறினார்.

உடனே அதை எடுக்க வீரமணியும், ராஜேஸ்வரியும் கீழே தேடினர். அந்த நேரத்தில் அந்த தம்பதி இருக்கையின் அடியில் ஒரு பையில் வைத்திருந்த ரூ.9 லட்சம் ரொக்கத்தை அந்த மர்ம கும்பல் திருடிக்கொண்டு சங்ககிரி பழைய பஸ் நிலையத்தில் இறங்கி கொண்டனர்.

பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்துக்கு அந்த பஸ் வந்து சேர்ந்த போது தான், அந்த தம்பதி தாங்கள் வைத்திருந்த பையில் இருந்த ரூ.9 லட்சம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சங்ககிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story