தமிழக- கர்நாடக எல்லையில் வைக்கப்பட்ட தமிழ் பெயர் பலகையை சேதப்படுத்திய கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர்


தமிழ் மொழியில் எழுதப்பட்ட பச்சை நிற ஸ்டிக்கரை கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் கிழித்தபோது
x
தமிழ் மொழியில் எழுதப்பட்ட பச்சை நிற ஸ்டிக்கரை கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் கிழித்தபோது
தினத்தந்தி 11 Jan 2021 6:31 AM GMT (Updated: 11 Jan 2021 6:31 AM GMT)

தாளவாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் வைக்கப்பட்ட தமிழ் பெயர் பலகையை கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாளவாடி மலைப்பகுதி
தாளவாடி மலைப்பகுதி தமிழகம்- கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. மேலும் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக பகுதியில் ஆங்காங்கே தமிழில் வரவேற்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி மாநில எல்லை தொடங்கும் இடத்தில் வரவேற்பு பலகையும் உள்ளது. இதில் ஒரு சில இடங்களில் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய 2 மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ் பெயர் பலகை
இதேபோல் தமிழக- கர்நாடக எல்லையில் தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் மலைக்கிராமத்தில் மாவட்ட ஊராட்சி சார்பில் வரவேற்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

அந்த பலகையில் ‘ஈரோடு மாவட்ட ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது,’ என அறிவிப்பு தமிழில் எழுதப்பட்டு இருந்தது. மேலும் அந்த அறிவிப்பு பலகை அருகிலேயே தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

கிழித்து எறிப்பு- சேதம்
இந்த நிலையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வழியாக வந்தனர். அப்போது ராமாபுரம் பகுதியில் தமிழில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையின் பச்சை நிற ஸ்டிக்கரை கிழித்து எறிந்தனர். அதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை சார்பில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையையும் சேதப்படுத்தியதுடன், அதை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதை அங்கு வேலை செய்து கொண்டிருந்த தமிழக நெடுஞ்சாலை பணியாளர்கள் உடனே தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிழித்து எறியப்பட்ட தமிழ் பெயர் பலகையையும், சேதப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையின் தமிழ் பெயர் பலகையையும் பார்வையிட்டு 
ஆய்வு செய்தனர்.

விசாரணை
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘இரு மாநில எல்லை வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும்.

ஆனால் தமிழ் மொழியில் மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளதை கண்டிக்கும் வகையில் தமிழ் பெயர் பலகைகளை கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் சேதப்படுத்தியது,’ தெரியவந்தது. 

இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story