கொரோனா வழிமுறை பின்பற்றாதோருக்கு அபராதம்: சென்னை மாநகராட்சியில் ரூ.3½ கோடி வசூல்


கொரோனா வழிமுறை பின்பற்றாதோருக்கு அபராதம்: சென்னை மாநகராட்சியில் ரூ.3½ கோடி வசூல்
x
தினத்தந்தி 11 Jan 2021 11:01 PM GMT (Updated: 11 Jan 2021 11:01 PM GMT)

சென்னையில் பல்வேறு தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்து வருகிறது.

இந்தநிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து அபராதம் வசூலித்ததாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் வாசலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 8-ந் தேதி வரை மொத்தம் ரூ.3.48 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story