கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை துரத்தி பிடித்த கல்வி மந்திரி; டிரைவர்-கண்டக்டருக்கு எச்சரிக்கை


பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை காரில் துரத்தி சென்று மடக்கி பிடித்த மந்திரி சுரேஷ்குமார்
x
பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை காரில் துரத்தி சென்று மடக்கி பிடித்த மந்திரி சுரேஷ்குமார்
தினத்தந்தி 12 Jan 2021 12:20 AM GMT (Updated: 12 Jan 2021 12:20 AM GMT)

துமகூரு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை கல்வி மந்திரி சுரேஷ்குமார், காரில் துரத்தி சென்று பிடித்தார். பின்னர் அவர் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு கிடந்த பள்ளிகள் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் என பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பள்ளி மாணவ-மாணவிகளை அரசு பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் ஏற்றுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை பள்ளி கல்வித்துறை மந்திரி தனது காரில் விரட்டி சென்று மடக்கி பிடித்த சம்பவம் துமகூருவில் நடந்துள்ளது. 

அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

நிற்காமல் சென்ற அரசு பஸ்
கர்நாடக கல்வித்துறை மந்திரியாக இருப்பவர் சுரேஷ்குமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துமகூரு மாவட்டம் மதுகிரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, ெகாரட்டகெரே தாலுகா நீலகொண்டா அருகே ஐ.கே.காலனி பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த கர்நாடக அரசு பஸ்சை நிறுத்துமாறு மாணவ-மாணவிகள் கையசைத்து உள்ளனர்.

ஆனால் அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. அவர் மாணவ-மாணவிகளை ஏற்றாமல் வேகமாக சென்றுவிட்டார். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

துரத்தி சென்று பிடித்த மந்திரி
அப்போது அந்த வழியாக காரில் சென்ற மந்திரி சுரேஷ்குமார் இதனை கவனித்துள்ளார். உடனடியாக அவர் தனது காரில் அந்த அரசு பஸ்சை பின்தொடர்ந்து துரத்தி சென்று மடக்கி பிடித்தார். பின்னா்் அவர் காரில் இருந்து இறங்கி வந்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை கீழே இறங்க வைத்து கண்டித்துள்ளார்.

மேலும் மந்திரி சுரேஷ்குமார், ‘கொரோனாவுக்கு பிறகு பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகளின் வருகையை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம், நீங்கள் மாணவ-மாணவிகளை ஏற்ற மறுத்து பஸ்சை நிறுத்தாமல் சென்றால் என்ன அர்த்தம். இனிமேலும் இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும்’ என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அவர் பள்ளி மாணவ-மாணவிகளை பஸ்சில் ஏற்றி அழைத்து செல்லும்படி டிரைவர்-கண்டக்டருக்கு உத்தரவிட்டார்.

பாராட்டு
பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சை கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் காரில் துரத்தி சென்று மடக்கி பிடித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய துமகூரு பணிமனைக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தவறு செய்த டிரைவர்-கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story