அனைத்து பிரிவு வகுப்புகளுடன் கர்நாடகத்தில் 15-ந்தேதி முதல் கல்லூரிகள் முழுமையாக இயங்கும்: கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்


கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்
x
கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்
தினத்தந்தி 12 Jan 2021 12:34 AM GMT (Updated: 12 Jan 2021 12:34 AM GMT)

அனைத்து பிரிவு வகுப்புகளுடன் வருகிற 15-ந்தேதி முதல் கர்நாடகத்தில் அனைத்து கல்லூரிகளும் முழுமையாக இயங்கும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

நேரடி வகுப்புகள்
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது வைரஸ் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டு வகுப்புகள் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. டிகிரி கல்லூரிகள் உள்பட அனைத்து வகையான கல்லூரிகளின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கல்லூரிகளை திறந்து அனைத்து பிரிவு வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தில் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். 

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு
கர்நாடகத்தில் கல்லூரிகளின் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்கள், தங்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதன்படி கர்நாடகத்தில் கல்லூரிகள் வருகிற 15-ந் தேதி முதல் முழுமையாக செயல்பட தொடங்கும்.

டிகிரி கல்லூரி உள்பட அனைத்து வகையான கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. அனைத்து கல்லூரிகளிலும் விடுதிகள் தொடங்கப்படுகின்றன. கல்லூரி பஸ் வசதியும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும், கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பஸ் பாஸ்
கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை, சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி வைரசை கொல்லும் நடவடிக்கைகள், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள அரசு பஸ் பணிமனை அதிகாரிகளுடன் கலந்து பேசி மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளோம். மாணவர்களுக்கு நேரடியாக தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். தேர்வு தேதி குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் நாயக், சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் ரஷ்மி மகேஷ், கல்லூரி கல்வித்துறை ஆணையர் பிரதீப், சமூக நலத்துறை கமிஷனர் ரவிக்குமார் சுரபுர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story