டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 20-ந் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் போராட்டம்: கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார்


கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார்
x
கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார்
தினத்தந்தி 12 Jan 2021 12:59 AM GMT (Updated: 12 Jan 2021 12:59 AM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 20-ந் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சங்கல்ப (சபதம்) மாநாடு பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக மற்றும் தேசிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கும் அரசியலை நாங்கள் உற்றுநோக்கி கவனித்து வருகிறோம். கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்காக கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தலைவரை மையப்படுத்தி கட்சியை பலப்படுத்தாமல், தொண்டர்களை மையப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

அரசியல் சாசனம்
கட்சியில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், பூத் மட்டத்திலான பொறுப்புகளை கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியை பலப்படுத்தும் பணிகளுடன் இந்த அரசின் தோல்விகளுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம். அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து உரையாற்றினால் போதாது. நமது நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தியது காங்கிரஸ். காங்கிரசின் வரலாறே போராட்டம் தான்.

நாட்டுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்தோம். அரசியல் சாசனத்தை உருவாக்கினோம். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மறக்கக்கூடாது. கொள்கைகளை மறந்தால் தோல்வி நிச்சயம். காங்கிரசில் ஒழுங்கு முக்கியம். கட்சியின் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை பின்பற்ற முடியாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம். இங்கு தலைவரை புகழ்ந்து பேசுவதை தவிர்த்து கட்சியை புகழ வேண்டும்.

மக்களின் பிரச்சினைகள்
வருகிற 20-ந் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களூருவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். சட்டசபை தேர்தலை சந்திக்க நாம் இப்போது இருந்தே தயாராக வேண்டும். மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டறிய வேண்டும். அதற்கேற்றவாறு நாம் நமது போராட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். கிராம பஞ்சாயத்து, பூத், வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்படும். பூத்களில் டிஜிட்டல் இளைஞர் குழு அமைக்கப்படும்.

கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள். நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வருபவர்களுக்கு பதவி வழங்கப்படும். புதியவர்களுக்கும் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி மேடையில் தலைவர்கள் அமரும் நடைமுறை இருக்காது. யாராக இருந்தாலும் கீழ் வரிசையில் தான் அமர வேண்டும். சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு நாம் தயாராக வேண்டும்.

கிராமங்களுக்கு சென்று...
வருகிற நாட்களில் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் கிராமங்களுக்கு சென்று கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story