புதுக்கோட்டையில் இடைவிடாமல் பெய்த மழை: அறந்தாங்கியில் 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது


புதுக்கோட்டையில் இடைவிடாமல் பெய்த மழை: அறந்தாங்கியில் 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 12 Jan 2021 1:10 AM GMT (Updated: 12 Jan 2021 1:10 AM GMT)

புதுக்கோட்டையில் இடைவிடாது மழை பெய்ததால் அறந்தாங்கியில் 3 வீடுகளில் சுவர் இ்டிந்து விழுந்தன. இந்த மழையால் பொங்கல் விற்பனை களையிழந்தது.

புதுக்கோட்டை,

வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும் மழை பெய்தது. நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 11 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை தொடர்ந்து ஒரே சீராக தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. மாலை 5.30 மணி அளவில் சற்று அதிகமாக பெய்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் சிலர் குடைகளை பிடித்தபடியும், சிலர் மழையில் நனைந்தபடியும் சாலையில் நடந்து சென்றதை காணமுடிந்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழை கோட் அணிந்தபடியும், சிலர் குடைகளை பிடித்தபடியும் சென்றனர். ஒரே சீராக மழை பெய்த நிலையில் வானில் கருமேகங்கள் காணப்பட்டதால் பகலிலும் வாகனங்களில் சிலர் முகப்புவிளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

3 வீடுகள் இடித்து விழுந்தன

அறந்தாங்கி பகுதியில் மழை பெய்ததால் அறந்தாங்கியை சுற்றி உள்ள விஜயபுரம், கொடிவயல், மங்களநாடு, அமரசிம்மேந்திரபுரம், நாகுடி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், கொடிவயல், கூகனூர், இடையார், ஆளபிறந்தான், எரிச்சி, கடையாத்துபட்டி ஆகிய பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த நெற்கதிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி முளைத்து உள்ளது. வயல் வெளி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதே நிலைதான் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த தொடர் மழைக்கு விஜயபுரம் தெற்கு பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அமரசிம்மேந்திரபுரத்தை சேர்ந்த பாக்கியம், புஷ்பம் ஆகிய 3 பேர்களின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தன.

குடியிருப்பு பகுதியில்புகுந்த தண்ணீர்

கோட்டைப்பட்டினம் பகுதியில் பெய்த மழையால் சுற்றியுள்ள கண் மாய்கள் நிரம்பி வழிகிறது. இதனால் அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள பாலத்தின் வழியே கடலுக்குள் செல்லும். ஆனால் தற்போது பாலத்தின் தண்ணீர் செல்லும் பகுதி முழுவதும் மரங்கள் உள்ளிட்ட செடிகள் மண்டி காடு போல் கிடக்கிறது.

இதனால் தண்ணீர் கடலுக்குள் போகமுடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதர் மண்டி கிடக்கும் மரங்களை அகற்றி தண்ணீர் செல்லும் பாலத்தை தூர்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கரும்பு விற்பனை பாதிப்பு

வடகாடு பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்திருந்த வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள், பரங்கிக்காய், புடலங்காய் போன்ற விவசாய விளை பொருட்கள் விற்பனை இன்றி வெறிச்சோடிய நிலையில் கமிஷன் கடைகளில் காணப்படுகிறது. இதேபோல் பொங்கல் பானை விற்பனையும், வாங்குவோர் இன்றி தார்ப்பாய் கொண்டு மூடிய நிலையில் காணப்படுகிறது. மேலும் மஞ்சள் கொத்துக்கள், செங்கரும்பு விற்பனையும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

வடகாடு கடைவீதி பகுதிகளில் உள்ள பொங்கல் பண்டிகை யொட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செங்கரும்புகள் ஒருசில பொங்கல் சீர்வரிசைக்கு மட்டுமே விற்பனை ஆன நிலையில், தொடர்மழை பெய்து வருவதையடுத்து, செங்கரும்பு விற்பனை மந்தமாக நடந்து வருகிறது. இதனால் செங்கரும்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.

நெற்கதிர்கள் நாசம்

வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் மிளகாய் கன்றுகளைஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

தொடர் மழையால் தாமதமாக தொடங்கிய மிளகாய் நடவு பணிகள் தற்போது மீண்டும் தொடர்மழை பெய்து வருவதையடுத்து, நடவு செய்யப்பட்ட மிளகாய் செடிகள் அப்படி, அப்படியே மரத்துப்போன நிலையில் உள்ளது. வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் சம்பா நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் இப்பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து முளைத்து வரத்தொடங்கியுள்ளது.

இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாது அடை மழை பெய்து வருகின்றது. இந்த மழையால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Next Story