45 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்; கர்நாடகத்தில் முதல்கட்டமாக 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி + "||" + Immunity develops after 45 days; Corona vaccine for 16 lakh people in Karnataka for the first time: Health Minister Sudhakar
45 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்; கர்நாடகத்தில் முதல்கட்டமாக 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் முதல்கட்டமாக 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
கொரோனா தடுப்பூசிகள்
கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் கலந்தரையாடினார். இதில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலமாக கலந்து கொண்டார். இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்து பிரதமர் மோடி காணொலி மூலம் நடந்த கூட்டத்தில் விளக்கினார். நமது நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது முற்றிலும் பாதுகாப்பானது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார். வருகிற 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.
சுகாதார பணியாளர்கள்
முதல்கட்டமாக நாடு முழுவதும் 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முற்றிலுமாக இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார். இதில் கர்நாடகத்தில் மட்டும் முதல்கட்டமாக 16 லட்சம் முன்கள பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். இந்த முதல்கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்பதாக பிரதமர் கூறினார்.
முதல்கட்ட தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்த பிறகு வயது வித்தியாசம் இன்றி இணை நோய் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.
தடுப்பூசி பெற்றவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2-வது ‘டோஸ்' தடுப்பூசி போடப்படும். 45 நாட்களுக்கு பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் பயப்படாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் தடுப்பூசிகளை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் தயாராக உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இந்த ஊசி போடப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.